AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, December 12, 2009

தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா?



தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா?

ஆதிகாலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம்.
திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்த அவன் தேவர்களை எல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.
தேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறை இட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்கு அளித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமாதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசுரனைக் கொன்றுக் விட்டார்களாம்.
நரகாசூரன் சாகும் பொழுது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம்.
கிருஷ்ணன் 'அப்படியே ஆகட்டும்' என்று வாக்களித்தாராம். ஆதலால் நாம் கொண்டாடு கிறோமாம் , அல்லது கொண்டாட வேண்டுமாம்.
இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்தி பார்ப்போம்.
முதலாவதாக, இந்தக் கதை உண்மையாக இருக்க முடியுமா?
எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும் , உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமாதேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும்? (பூமி தேவி என்றால் போமி அல்லவா? பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான் ? அத்தகைய மேம்பாடு உடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித் தான் செய்தாலும், அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்?
அப்படி இருந்தாலும், தானே வந்து தான் கொள்ள வேண்டுமா? மேற்ப்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமி தேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள் தான் உலகத்தை எல்லாம் காப்பாற்றுகிறாளாம் ! உலக மக்கள் செய்யும் பாவங்களை எல்லாம் பொறுத்து கொள்கிறாளாம்!
'பொறுமையில் பூமி தேவி போல்' என்று உதாரணத்திற்கு கூட பண்டிதரும் பாமரரும் அந்த அம்மையாரை
உதாரணமாக கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனை கொல்லும் போது, தானும் உடனிருக்க வேண்டுமெண்டு திருமாலைக் கேட்டுக் கொண்டாலாம்! என்னே தாயின் பாசம்!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்கள் என்றும், ஆரியராகிய பார்பனர்கள் தாங்களே தேவர்கள் என்றும் கற்பித்து கதை கட்டியிருக்கிற, தேவ-அசுர போராட்டத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என்னச் செய்வது? நம்மைப் ஏமாற்றி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுய மரியாதையை என்ன என்பது? நமது பகுத்தறிவை ஏனென்று சொல்வது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மை என்று ஒப்புக் கொண்டு நமது பகுத்தறிவை இழந்து, இந்த தீபாவளியை கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது ?
சென்றது போக, இனிமேலாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப் பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது. ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
- தந்தை பெரியார்

No comments:

Post a Comment