AZHAGIRI.R

AZHAGIRI.R

Thursday, February 18, 2010

பழ மொழி-tamil proverbs



அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
இரைச்சல் இலாபம்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அறச் செட்டு முழு நட்டம் .
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அறமுறுக்கினால் அற்றும் போகும்.

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி
தான் தியாகம் வாங்கவேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அற்ப அறிவு அல்லற் கிடம்.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?



ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

இ, ஈ

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
இராச திசையில் கெட்டவணுமில்லை
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி
இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.

உ, ஊ

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

'' உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார்
தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ''
[ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]
இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலோபிக்கு இரட்டை செலவு.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.
உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
[இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊண் அற்றபோது உடலற்றது.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

எ, ஏ

எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்
என்ன தருவாய் ?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[நெருப்பில்லாது புகையாது]

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
எறும்புந் தன் கையால் எண் சாண்

ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்
கோபம்.

ஐ, ஒ, ஓ, ஒள

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.



கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.

கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கண் கண்டது கை செய்யும்.
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கரணம் தப்பினால் மரணம்.
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

கா

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

கி, கீ, கு, கூ

கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.

குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்றக் குருவில்லை.
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்பை உயரும் கோபுரம் தாழும்.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குரங்கின் கைப் பூமாலை.
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.


கெ, கே

கெடுக்கினும் கல்வி கேடுபடாது
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
கெடுவான் கேடு நினைப்பான்
கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
கெட்டும் பட்டணம் சேர்
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

கை

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
கையிலே காசு வாயிலே தோசை
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்

கொ

கொடிக்கு காய் கனமா?
கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

கோ

கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

'' கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் ''
[* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்*]

'' கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும் ''
[* மற்றவர்கள் கோடி கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தாரோடு கூடிப்
பழகுவதே கோடிப் பெருமை*] இது ஒளவையாரின் பொன்மொழி

ச, சா

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
சாண் ஏற முழம் சறுக்கிறது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சு, சூ

சுக துக்கம் சுழல் சக்கரம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
சுட்ட சட்டி அறியுமா சுவை.
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

செ, சே, சை

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செயவன திருந்தச் செய்.
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
சேற்றிலே செந்தாமரை போல.

சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொ, சோ

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
சொல் அம்போ வில் அம்போ?
சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
சொல்வல்லவனை வெல்லல் அரிது.
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.



தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தருமம் தலைகாக்கும்.
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
தலை இருக்க வால் ஆடலாமா ?
தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?

தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
தவளை தன் வாயாற் கெடும்.
தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.



நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

நயத்திலாகிறது பயத்திலாகாது.
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.

நல்லது செய்து நடுவழியே போனால்,
பொல்லாதது போகிற வழியே போகிறது.
நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது
கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

நா

நா அசைய நாடு அசையும்.
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

நாய் இருக்கிற சண்டை உண்டு.
நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
நாய் விற்ற காசு குரைக்குமா?
நாலாறு கூடினால் பாலாறு.
நாள் செய்வது நல்லார் செய்யார்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

நி, நீ

நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
நித்திய கண்டம் பூரண ஆயிசு.
நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
நித்திரை சுகம் அறியாது.
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
நீர் மேல் எழுத்து போல்.
நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நு, நூ, நெ, நே, நை, நொ, நோ

நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
நூல் கற்றவனே மேலவன்.
நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெய் முந்தியோ திரி முந்தியோ.
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நேற்று உள்ளார் இன்று இல்லை.

நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
நோய் கொண்டார் பேய் கொண்டார்.
நோய்க்கு இடம் கொடேல்.



பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
பக்கச் சொல் பதினாயிரம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.

பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
படையிருந்தால் அரணில்லை.
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.

பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
பணம் உண்டானால் மணம் உண்டு.
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

பதறாத காரியம் சிதறாது.
பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.

பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

பு, பூ

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
புத்திமான் பலவான்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

பெ, பே

பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பேசப் பேச மாசு அறும்.
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
பேராசை பெருநட்டம்.
பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

பொ, போ

பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.

பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
பொறுமை கடலினும் பெரிது.
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.



மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண்டையுள்ள வரை சளி போகாது.

மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.

மவுனம் கலக நாசம்
மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
மனமுரண்டிற்கு மருந்தில்லை.

மனம் உண்டானால் இடம் உண்டு.
[ மனமுண்டால் மார்க்கம் உண்டு]
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
மனம் போல வாழ்வு.
மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

மா

மாடம் இடிந்தால் கூடம்.
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.

மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
மாரடித்த கூலி மடி மேலே.

மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
மாரி யல்லது காரியம் இல்லை.
மாவுக்குத் தக்க பணியாரம்.
மாற்றானுக்கு இடங் கொடேல்.
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

மி, மீ, மு, மூ

மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.

'மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
மீ தூண் விரும்பேல்.

முகத்துக்கு முகம் கண்ணாடி
முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா

முதல் கோணல் முற்றுங் கோணல்
முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
முருங்கை பருத்தால் தூணாகுமா?
முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
முன் ஏர் போன வழிப் பின் ஏர்
முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு

மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.

மெ, மே, மொ, மோ,மெள

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

மெளனம் மலையைச் சாதிக்கும்.


வ, வா, வி

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
வடக்கே கருத்தால் மழை வரும்.
வட்டி ஆசை முதலுக்கு கேடு.
வணங்கின முள் பிழைக்கும்.

வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
வருந்தினால் வாராதது இல்லை.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
வளவனாயினும் அளவறிந் தளித்துண்
வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
விதி எப்படியோ மதி அப்படி.
வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

No comments:

Post a Comment