AZHAGIRI.R

AZHAGIRI.R

Monday, February 22, 2010



தாலி பற்றி பெரியார் சொல்கிறார்!


பொன்மொழிகள்

பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,

அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,

இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.

புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,

இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.

ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்

கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை

பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும்

பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால்

அறுத்தெரியட்டும். அல்லது -

புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.

தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்

கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.
—————————–
பெரியார் கேட்கிறார்?

நமது இலக்கியங்கள் யாவும்

நியாயத்திற்காக, ஒழுக்கத்திற்காக

எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு

என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ!

அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும்

வைத்திருக்க வேண்டுமல்லவா?
——————————————–
பெண் அலங்கரிக்கப்பட்ட பொம்மையா?
ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி,

ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி,

ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு

ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.

ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும்

ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை

என்பதல்லாமல் பெண்கள் பெரிதும்

எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள்-

என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர

மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில்

வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே

இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன்

இருக்கிறதா என்று பாருங்கள். இந்த இழி நிலை

பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லையா?

ஆகவே ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டுழியமாய்

நடத்தலாமா? என்று கேட்கிறேன்.
———————————————————–
பெரியார் சொல்கிறார்!

மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய

யோக்கியதையே எடுத்துக் கொண்டால்

அவர்கள் எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும்

எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும்-

தொழில் திறமையும் கொண்ட சக்தியையும்

உடையவர்களாய் இருக்கின்றார்களே ஒழிய,

இந்திய ஸ்தரீ ரத்தினங்கள் கோருகிற மாதிரி

சங்கீதம்- கோலாட்டம்- பின்னல்- குடும்ப சாஸ்திரங்கள்

ஆகியவைகளைக் கற்று சீதையைப் போலவும்,

சந்திரமதியைப் போலவும், திருவள்ளுவர்

பெண் ஜாதியான வாசுகியைப் போலவும்-

நளாயினியைப் போலவும் இருக்கத்

தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள்.
———————————————————
திருமணங்கள் மதத்தைப் பாதுகாக்கவே…

திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல.

உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது.

இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ,

பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக

ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும்

மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள்.

இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள்

நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம்.

இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம்

மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன.

1 comment:

  1. ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

    மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

    வயது பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி ஈ.வே.ரா!

    ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    ”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
    (குடியரசு 03-06-1928)

    இது மட்டுமல்ல; இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-

    ”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.
    (நூல்:- நினைவுகள்)

    திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?

    கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்; சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே. அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா?

    ReplyDelete