AZHAGIRI.R

AZHAGIRI.R

Sunday, December 6, 2009

KANCHIPURAM- SANCTUM SANCTORUM CHANGED AS BED ROOM

வீடியோவில் அம்பலமான படுபாதகம்...

கருவறைக்குள் ஒரு காமுகன்!
'நகரேஷு காஞ்சி' என்பார்கள். ஆன்மிகத்தின் ஆணிவேர் காலங்களைக் கடந்து அழுந்தப் பதிந்து கிடக்கும் பூமி இது. கோயில்களுக்கும், பக்திப் பெருக்கெடுக்கும் திருவிழாக்களுக்கும், மனதை வலுவாக்கும் நல்ல பல அறிஞர்களின் கருத்துக்களுக்கும் பஞ்சமில்லாத நகரம் காஞ்சிபுரம்!

விநோதமான ஒற்றுமையாக, பகுத்தறிவுச் சிந்தனை மூலம் விழிப்பு உணர்வு உண்டாக்கி, அதோடு அரசியலிலும் புதிய சாதனைகள் படைத்த அறிஞர் அண்ணா பிறந்த நகரமும் இதுவே!
ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையோ, நாட்டமோ இல்லாத வர்கள்கூட... கோயில் என்றால் மரியாதையோடு பார்த்துத் தாண்டிப் போகிற வழக்கம் இங்கே உண்டு. ஆத்திக அன்பர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
இங்கேதான், இங்கிருந்துதான் ஜூ.வி. ஆக்ஷன் செல் 044-42890005 எண்ணில்
அந்தக் குரல் வந்து பதிவாகி இருந்தது. ''என் பெயர் முக்கியமில்லை. ஆனால், என்னிடம் இருக்கும் ஒரு வீடியோ சி.டி. முக்கிய மானது. அதை ஜூ.வி. முகவரிக்கு தபாலில் அனுப்பி வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு, இந்த எண்ணுக்குக் கூப்பிடுங்கள். மிச்சத்தைச் சொல்கிறேன்...'' என்றது அந்தக் குரல்!
சொன்னபடியே அந்த சி.டி-யும் வந்தது. எத்தனையோ ஊழல் விவகாரங்கள் குறித்த, ஆவணம்போலத்தான் இதுவும் என்று எண்ணி அதை ஓடவிட்டோம். அந்த சி.டி. ஓட ஓட... நம் இதயம் நின்றுவிடும் போலானது! என்னவொரு பாதகம் அது..!
அது ஒரு கோயிலின் கருவறை என்பது புரிகிறது; கம்பீரமான கருவறையின் கதவுகள் பாதி திறந்தே கிடக்க, அந்தக் கதவுக்குப் பின்னால் உள்ள மறைவைக் குறிவைக்கிறது கேமரா. அந்தக் கருவறையில் பிரதானமாக தரிசனம் கொடுக்கும் சிவலிங்கத்துக்கும் முன்னால், படமெடுத்தாடும் நாக தெய்வத்தின் சிறிய விக்கிரகம். அதை அமைத்துள்ள கான்க்ரீட் திண்டின்மேல் அமர்ந் திருக்கிறார் அந்த மனிதர். கோயில் குருக்களுக்குரிய எல்லா லட்சணங்களையும் அவருடைய பின்புற தோற்றத்திலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.
சேலை உடுத்தியபடி இவரோடு காஷுவலாக நிற்கிறார், நடுத்தர வயதில் ஒரு பெண்மணி. சுவற்றை ஒட்டினாற்போல் நிற்கும் அந்தப் பெண்மணியை ஆலிங்கனம் செய்துகொண்டு... அப்பப்பா... இடம் - பொருள் - ஏவல் தெரியாமல், ஒரு மிருகமாகவே செயல்படும் அந்த மனிதரும் பெண்மணியும் துளிகூட அச்சமோ, கூச்சமோ, தெய்வகுத்தமோ பார்க்கிற வகையாகத் தெரியவில்லை.

இடையிடையே, கதவுக்கு வெளியே இடுப்பை மட்டும் வளைத்துப் பார்த்து, பக்தர்கள் யாராவது அர்ச் சனைக்கோ ஆராதனைக்கோ வருகிறார்களா என்று செக் பண்ணிக் கொள்கிறார் அந்த குருக்கள். பிறகு, தன் பாவத்தைத் தொடர்கிறார். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அதை தொடர்ந்து பார்த்தால், இறுதியில் இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்து ரூபாய் நோட்டுகளை உருவி அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து அனுப்பிவைப்பது வரையில் பதிவாகியிருக்கிறது!
சி.டி-யின் அடுத்ததொரு காட்சி... அடுத்த தொரு பெண். குங்குமம், விபூதி என மங்கலம் துலங்கக் காட்சி தரும் இந்தப் பெண்ணுக்கு வயது - இருபத்தைந்துக்குள் இருக்கும். கழுத்தில் தாலி மின்னுகிறது! இடம் - இதே கருவறையின் கதவு மறைப்புதான். முந்தைய காட்சி போலவே பட்டப்பகலில்தான் இதுவும் அரங்கேறுகிறது.
இந்தப் பெண்ணோடு இருந்த படியே எட்டிப் பார்க்கும் அர்ச்சகர், சட்டென்று ஷார்ப்பாகி... நகருகிறார். இளம்பெண்ணை சுவற்றோடு சுவறாக ஒட்டி நிறுத்திவிட்டு... கருவறைக்கு வெளியே காஷுவலாக செல்கிறார். வந்துவிட்ட பக்தர் களிடமிருந்து அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு, எந்தவித சலனமும் முகத்தில் காட்டாமல் சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்கிறார். மிகச் சுருக்கமாக தன் அர்ச்சனையை முடித்துவிட்டு, தீபாராதனைத் தட்டு சகிதம் மறுபடி வெளியேபோகிறார் (பக்தர்களுக்கு கற்பூர ஜோதி காட்டுகிறார் என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது!). வந்த வர்கள் இறைவனிடம் தங்கள் வேண்டுதலைச் சொல்லிவிட்டுக் கிளம்பியதும், மறுபடி கதவை லேசாக சாத்தி வைத்து, அதன்பின்னால் கேமராவின் ஆளுகைக்குள் வந்து அந்த இளம்பெண்ணோடு ஐக்கியமாகிறார்!
மூன்றாம் காட்சி கோயிலில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அது ஒரு லாட்ஜ் அறையாகவே தெரிகிறது. தலைக்கு மேல் போர்ட்டபிள் டி.வி. ஓடிக்கொண்டிருக்க... இதே மனிதரும் முற்றிலும் புதியதொரு பெண்மணியும்! இறுதியில் அந்தப் பெண் மணிக்கும் பணம் அளிக்கப்படுகிறது... எந்த பக்தர், என்ன பிரார்த் தனையோடு இறைவனின் பெயரால் தீபாராதனைத் தட்டில் போட்ட பணமோ..?!
- இவை அனைத்துமே அந்த குருக்களின் சொந்த செல்போனில், வாகாக இடம் பார்த்து வைக்கப்பட்டு, அவருக்குத் தெரிந்தே பதிவாகியிருக்கிறது என்பது இந்தக் காட்சிகளைக் காணும்போதே உறுதியாகிறது. தவறான செய்கை, தவறான இடம்... அதை தாண்டி அதையெல்லாம் பதிவு செய்து வைத்துக்கொள்ளும் உச்சகட்ட வக்கிரம்!
இதுபோல் மொத்தம் ஆறு பெண்கள் தொடர்பான காட்சிகள் இந்த சி.டி-யில் இடம் பெற்றிருக்க... அதையெல்லாம் முழுதாகப் பார்ப்பதற்கு மனதில் திடமில்லாமல், சி.டி-யை அனுப்பி வைத்த வாசகரின் எண்ணுக்கே போன் போட்டோம்.
''உங்கள், பெயரும் அடையாளங்களும் ரகசியமாக வைக்கப்படும். சி.டி-யின் பின்னணியைச் சொல்லுங்கள்...'' என்றோம். அவர் சொன்னதெல்லாமே, ''இது என் கைக்கு வந்து சில மாதங்கள் ஓடிவிட்டது. ஜூ.வி-யின் பார்வைக்கு வைப்பதா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திலே நாட்கள் ஓடிவிட்டன. தவறு செய்பவர்களை மக்கள் மன்றத்தின்முன் நிறுத்தினால்தான், இனியருத்தர் இப்படிப்பட்ட பாவத்தில் இறங்க மாட்டார்கள் என்று தோன்றியது!'' என்று நிறுத்தியவர்,

''இந்த குருக்களை நான் காஞ்சி நகரத்துக்குள்ளேயே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன கோயில்களுக்கு அவரே அர்ச்சனை செய்ய வருவார். இப்போது எந்த கோயிலில் இருக்கிறார் என்று தெரியாது...'' என்றார்.
காஞ்சிபுரத்தில் அத்தனை கோயில்களிலும் சுற்றித் திரிந்து எப்படிக் கண்டு பிடிக்க? சிவ லிங்கமும், கதவுக்கு அருகே நாகதேவதையும் அமைந்துள்ள கோயில்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முகமாக, நமது நிருபர் படை புறப்பட்டது.
காஞ்சியில் கால்பட்டதுமே, கண் திரும்பிய திசையெல்லாம் சுற்றுலாப் பயணிகள். ஏராளமான நம்பிக்கைகளோடு பஸ்ஸிலும், காரிலுமாகக் குவிந்து கிடந்தார்கள். ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, அந்தக் கருவறையின் பல்வேறு தோற்றங்களையும், அர்ச்சகரின் க்ளோஸ்-அப் முகத்தையும் எல்லா நிருபர்களிடமும் பிரின்ட் போட்டுக் கொடுத்திருந்தோம். சிறியது, பெரியது என்று வரிசையாகக் கோயில்களுக்கு நீண்டது அந்தப் பயணம். பூக்கடை, பூஜைப் பொருட்கள் விற்பனைக் கடை, டீக்கடை என்று விசாரித்துக் கொண்டே சென்றோம். எங்கும் அப்படி ஓர் இடமும், நாம் தேடும் குருக்களும் கிடைக்கவேயில்லை..!
மூன்று நாள் தேடலுக்குப் பின் ஓர் அர்ச்சகர், ''அட, ........... குருக்களாச்சே இது..! மச்சேச பெருமான் கோயிலில்தான் இருக்கிறார்..!'' என்று அடையாளம் காட்டினார்.
பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள கீழ ராஜவீதியில், அமைதியின் உருவமாக மச்சேசப் பெருமான் திருக்கோயில் காட்சியளிக்கிறது. அந்த மாலை நேரத்தில் நாம் உள்ளே போய்ப் பார்த்தபோது வீடியோ 'க்ளிப்'பில் நாம் பார்த்த இடங்கள் அப்படியே இருந்தன! அங்கிருந்த கோயில் ஊழியர் ஒருவரிடம்,
''திருத்தலங்கள் பற்றிய ஒரு பயணக் கட்டுரைக்கான தகவல் சேகரிக்க வந்திருக்கிறோம். கோயிலைப் பற்றியும், பணியாற்றும் குருக்களைப் பற்றியும் சொல்லுங்கள்...'' என்று கேட்டோம். .......... குருக்கள் பற்றியும் அப்போது சொன்ன அவர், நல்ல விதமாகவே கூறினார். அடுத்தடுத்து நாம் விசாரித்த ஊழியர்கள் சிலரும் அப்படியே சொன்னார்கள்.
ஒரு மணி நேரம் காத்திருந்த நிலையில், சுமார் 6 மணிக்கு நாம் தேடிய குருக்கள் கோயிலுக்குள் வந்தார். முப்பதுகளில் இருக்கும் அவரின் நெற்றியில் திருநீறும் குங்குமமும் மின்னிக்கொண்டிருந்தன. பளிச்சென்று வெளுத்துக் கட்டிய பஞ்சகச்ச வேட்டி... 'வீடியோ காட்சியில் பார்த்தவரேதான்' என்பதில் சந்தேகமில்லை. ஒதுங்கி நின்று கவனித்தோம்... கருவறையினுள் சென்றவர் சுத்தமாக தண்ணீர் விட்டு அலம்பியதோடு, மளமளவென அர்ச்சனையும் தொடங்கினார். கணீர் குரலில் மந்திரங்கள் வந்து விழுந்தன.
அத்தனை பக்தர்களும் இருக்கின்றபோதே, திடீரென்று ஒரு பெண்மணியின் வருகை. கையில் ஒரு பையோடு வந்து அதை குருக்களிடம் அளிக்கிறார் அந்தப் பெண்மணி. 'எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே' என்று யோசித்தால்... வீடியோவில் உள்ள முதல் காட்சியில் இடம்பெறும் அதே பெண்மணி. குருக்கள் அவரை நிமிர்ந்து பார்க்கிறார். ஒரே ஒரு கணம்தான். எதுவுமே பேசாமல் அந்தப் பையை வாங்கி வைத்துக்கொண்டு, ''அப்புறம் வா! பணம் கொடுத்துட
றேன்...'' என்று சொல்லி அனுப்புகிறார். அந்தப் பெண்மணியும் எந்தவித சலனமும் இன்றி வந்த வழியே திரும்பிப் போகிறார்!
பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து, குருக்கள் சற்று ஓய்வானதும் அவரிடம் நாம் பேச ஆரம்பிக்கிறோம். ''உங்களோட நடவடிக்கைகள் பற்றி நாலு பேர் நாலுவிதமா பேசுவது உங்களுக்குத் தெரியுமா?'' என்று ஆரம்பித்து, மெதுவாகக் கேள்விகள் போட்டோம். தன் தரப்பில் எந்த அப்பழுக்கும் இல்லையென்றும், பொறாமை காரணமாக நாலு பேர் நாலுவிதமாகப் பேசத்தான் செய்வார்கள் என்றும், அதையெல்லாம் நம்பிவிடக்கூடாது என்றும் பொறுமை யாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.
கடைசியாகத்தான் சி.டி. நகலில் பார்த்த காட்சிகளைப் பற்றிக் கேட்டோம். அந்த சி.டி.யிலிருந்து எடுத்த பிரின்ட்அவுட்கள் சிலவற்றை காட்டினோம். இப்போது அவரது பேச்சு நின்றது. சிவந்துபோன முகத்தோடு வெகுநேரம் மௌனமாக இருந்தவர், பிறகு மெள்ள பேச ஆரம்பித்தார்.
''நான் கொஞ்ச வருஷத்துக்கு முந்தி தெரியாம செஞ்ச தப்பு இது. யாரையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இப்படியெல்லாம் செய்யலை. என் வீட்டுக்காரிக்குக் கொஞ்சம் உடம்பு சுகமில்லாம போச்சு. அந்த நேரத்துல சபலப்பட்டுட்டேன்...'' என்றவரிடம்...
''எப்போது நடந்திருந்தால்தான் என்ன... நம்பிக்கையோடு ஒப்படைத்த ஒரு புனிதப் பணியை செய்யும் இடத்தில், அதிலும் தெய்வ சந்நிதானத்திலேயே செய்யக்கூடிய செயலா இது! அதிலும் சி.டி-யில் இடம்பெறும் காலண்டர் ஒன்று, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டுகிறதே..?'' என்றோம் அவரிடம்.
மறுபடி சிறு மௌனம். ''இந்தக் கோயில் தவிர இந்தப் பகுதியில் இன்னும் சில கோயில்களிலும் நான்தான் பூஜை பண்ணுவேன். பத்து வருஷத்துக்கும் மேலா இங்கே பூஜை பண்றேன். என் மேல் எந்த புகாரோ, பழிச்சொல்லோ வந்தது கிடையாது. அந்த சி.டி-யில் இருக்கிறதும்கூட நடத்தை சரியில்லாத பெண்கள்தான். தொழில்முறையே அப்படி!'' என்று அப்போதும் நியாயம் கற்பிக்கவே முயன்றார்.
''இந்த கோயிலுக்கு பகவானைப் பார்க்க வர்ற யாரையும் நான் ஏறெடுத்தும் பார்த்தது கிடையாது...'' என்று சொன்னதோடு, தன் பூர்வீகம், குடும்பத்தின் பாரம்பரியம் என்றெல்லாம் மிக விளக்கமாக சில விஷயங்களை எடுத்து வைத்துக்கொண்டே போனார். ''எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. அதை நினைச்சு நான் அப்பவே திருந்திட்டேன். ஆனாலும், கோயிலுக்குள் ஏதோ தப்பா நடக்கறதா மோப்பம் பிடிச்சு இங்கே கண்காணிப்பு கெடுபிடியை அதிகம் பண்ணியாச்சு. இப்போ நான் இன்னொரு பெரிய கோயிலிலும் முக்கிய பொறுப்புகளைப் பார்த்துக்கறேன். நான் பழைய ஆளில்லை!' என்று கீழிறங்கிய குரலில் சொல்லிவிட்டுத் தலையைத் தாழ்த்திக்கொண்டார் அவர்.
நாம் அதற்குமேல் எதுவும் பேசாமல் மௌனமாக வெளியே நடந்தோம்!
இந்த சி.டி. பதிவின் நகலை காவல்துறையின் பொறுப்பில் ஒப்படைத்துள்ளோம். நடந்த குற்றத்துக்கு சட்டத்தின் நடவடிக்கையும் தேவைதான் என்ற எங்கள் கருத்து, மதங்களைத் தாண்டி நியாயங்களை உணர்ந்த ஜூ.வி. வாசகர்களுக்கும் ஏற்புடை யதாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்..!
- ஜூ.வி. பறக்கும் படை


நன்றி

No comments:

Post a Comment