AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, June 26, 2010

கீதாசாரம்

கீதாசாரம்

கடமையைச் செய் பலனை எதிர்ப்பார்காதே என்பது பகவத்கீதையின் அமுதமொழி என்று கீதையைப் படிக்காதவர்கள் சொல்லித் திரிகிறார்கள். கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்ற கருத்து பகவத்கீதையில் எங்கும் சொல்லப்படவில்லை. தற்பொழுது கீதாசாரம் என்ற தலைப்பில் சில சொற்களைத் தாங்கிய அட்டைகள் தமிழகத்தில் பரவலாக வீடுகளிலும், கடைகளிலும், அரசு நிறுவனங்களிலும், வங்கிகளிலும் காணப்படுகின்றன. கீதாசாரத்தில் காணப்படும் சொற்கள்,

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகாவே நடக்கும்
எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு
எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்
எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனுடையது ஆகிறது .
இதுவே உலக நியதியும் என்னுடைய படைப்பின் சாராம்சமுமாகும். "



மேலே காட்டிய கீதாசாரத்தின் கருத்துக்களை நோக்கினால் அக்கருத்துகள் படிப்பவரின் உள்ளத்தையும் ஊக்கத்தையும் மழுங்கச் செய்யும் கருத்துக்கள் என்பதை உணரலாம். தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கண்ட உள்ளங்களுக்கு வேண்டுமென்றால் அச்சொற்கள் ஓரளவு ஆறுதல் அளிக்கலாம். ஆனால் மேற்கண்ட கருத்துகள் பகவத்கீதையில் சொல்லப்படவில்லை.

ஒரே தெருவில் ஒரு வீட்டில் திருமணம் நடக்கும். மற்றொரு வீட்டில் ஒருவர் இறந்து விடுவார். திருமணம் நடைபெறும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும், இழவு வீட்டில் துன்பம் இருக்கும். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவரின் உறவினருக்கு ஆறுதல் மொழி கூறுவார்கள். திருமண விழாவில் நலுங்கு பாடுவார்கள். இழவு வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள். திருமண விழாவில் மணமக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது பற்றி பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவரின் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி பேசுவார்கள். திருமண விழாவில் மணமக்கள் பெற்ற பரிசுப் பொருட்கள், சீர் முதலியவற்றை பற்றி மக்கள் பேசுவார்கள். இழவு வீட்டில் இறந்தவன் விட்டுச் சென்ற சொத்துக்கள் பற்றி பேசப்படும்.

இறந்தவன் உயிரோடு இருக்கும் போது அவனைப் பாராட்டிப் பேச விரும்பாதவர்கள் கூட இன்று அவனைப் பாராட்டுவார்கள். நேற்று இதே நேரத்தில் என்னோடு நன்றாகப் பேசி கொண்டிருந்தார். இன்று திடீர் என்று இறந்துவிட்டாரே என்று கூறுவார் ஒருவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நம்ம ஊருக்கு பிழைப்புத் தேடி வந்தார். நன்றாக சம்பாதித்து விட்டார். ஆனால், எதையும் திக்காமல் போய்விட்டார். அவர் பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை யார் எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை என்று ஒருவர் நினைப்பார். என்ன சொத்து சேர்த்து என்னப் பயன்? சுடுக்காடிலே கொண்டுப்போய் அவர் போட்டிருந்த அரைகான்கயிற்றையும் கழற்றி விட்டுத் தான் எரிக்கப் போகிறார்கள். அம்மணமாய் பிறந்தான் அம்மணமாய் போகிறான். இது தான் வாழ்க்கை என்ற தத்துவம் உரைப்பார் ஒருவர். பிணத்தை கற்றிக் கொண்டு வயிற்றிலேயும் மார்பிலேயும் கைகளால் அடித்துக் கொண்டு ஒப்பாரி பாட்டு பாடுவார்கள் சிலர். நேற்று அரசனைப் போல் நடந்து வந்தாயே, இன்று பிணமாய் போகிறாயே! சொத்து சுகம் சேர்த்தாயே, அனுபவிக்காமல் (துய்க்காமல்) போறீயே! போன்ற கருத்துகள் அடங்கியப் புலம்பலை ஒப்பாரியாகப் பாடுவார்கள்.

'வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? போனால் போகட்டும் போடா! இந்த பூமியில் நிலையை வாழ்ந்தவர் யாரடா' என்ற தத்துவங்களை எல்லாம் இழவு வீட்டில் பேசிக் கொண்டிருப்பவர்கள் பேச்சுகளிலும் ஒப்பாரி பாடல்களிலும் நாம் கேட்கலாம்.

இழவு வீட்டில் பிணத்திற்கு முன்னால் இருந்து கொண்டு புலம்பும் புலம்பலுக்கும் கீதாசாரத்திர்க்கும் ஏதேனும் வேற்றுமை உண்டா? கீதாசாரம் என்பது இறந்தவனின் பிணத்தின் முன் நின்று இறந்தவனின் ஆத்மா சாந்தியடைவதற்க்காக சொல்லப்படும் செய்திகள் போலல்லவா இருக்கிறது?

இந்த புலம்பற் சொற்களில் ஏதோ சிறப்பு இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்கள் தங்கள் இல்லங்களிலும், கடைகளிலும், கீதாசாரத்தை தொங்கவிட்டிருக்கிறார்கள். கீதாசாரத்தை ஒரு பிணத்தின் முன் நின்று கூறிப் புலம்பலாம். ஆனால் திருமண விழாவில் தாலிக் கட்டிய கணவனிடம் சென்று எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையதாகும் என்று கீதாசாரத்தை யாரேனும் சொல்லத் துணிவார்களா? வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவரும் வாடிக்கையாளரிடம் ' எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவனுடையது ஆகும்' என்று கீதாசாரத்தை வங்கி மேலாளர் கூறுவாரா? கீதாசாரத்தை பகவத்கீதையின் சாறு என்று கூறுகிறார்களே, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்போம். எது நடந்ததோ அது நன்றாக நடந்தது என்று கீதாசாரம் கூறுகிறதே அப்படியென்றால் சீதையை இராவணன் தூக்கிச் சென்றானே அது நன்றாக நடந்தது தானே. இராமன் ஏன் சீதையை இழந்து வாட வேண்டும்? ஏன் சீதையை தேட முயல வேண்டும்? இன்று சீதை (எது) உன்னுடையவலாக இருந்தாளோ அவள் (அது) நாளை இராவனனுடையவள் என்று நினைத்து அமைதியாக அல்லவோ இருந்திருக்கவேண்டும். இராமனும், கிருட்டிணனும் திருமாலின் அவதாரங்கள்தானே. அவதாரம் சொல்வதையே மற்றொரு அவதாரம் போற்றவில்லையே.

கீதாசாரத்தை சமச்க்கிருதத்திலியே எழுதி மாட்டியிருந்தால் கூட நாம் ஒருவேளை வருந்தாமலிருக்கலாம். தமிழிலியே கீதாசாரத்தை எழுதித் தொங்கவிட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிற தமிழர்களின் நிலையை என்னென்று கூறுவது? பெரும்பாலான தமிழர்கள் பார்ப்பன புரோகிதரை வைத்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். பார்பன புரோகிதன் சமஸ்கிருதத்தில் தான் ஏதோ உளறுவான். அவன் சமஸ்க்கிருதத்தில் புலம்புவதால் மக்களுக்கு அவன் கல்யாண மந்திரம் ஓதுகிறானா அல்லது கருமாதி மந்திரம் ஓதுகிறானா என்பது தெரியாது.

'மாங்கல்யம் தந்துநானே ந மம ஜீவ ந ஹேது நா கண்ட் டே பத்னாமி சுபகே சஞ்சீவ சரத சதம்'

'இது மங்கலகரமான் கயிறு. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமாக இதை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீ நூறு ஆண்டு வாழ்வாய்' . தாலி கட்டுகிறவன் ஒரோன். ஆனால் பலர் முன்னியிலையில் மணமகளின் கழுத்தில் மங்கல கயிறு கட்டுகிறேன் என்று உறுதிமொழி எடுக்கிறான் புரோகிதன்.

இந்த இழிவு இன்னும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த உறுதிமொழி சமஸ்க்கிருத மொழியில் இருப்பதால் புரியாமல் இழிவை தேடிக் கொள்கிறார்கள். ஆனால் கீதாசாரம் என்று தமிழிலியே எழுதியதையும் வைத்துக் கொண்டு ஆடுகிறார்களே தமிழ் மக்கள்.

நன்றி
பகவத்கீதை - ஒரு பார்வை
ஆசிரியர் - வே. இந்திரசித்து

2 comments:

  1. அற்புதமான விளக்கம். பகுத்தறிவின் வெளிபாடு.நல்ல சிந்தனை.
    வசனங்கள் நடை முறைக்கு ஏற்றவாரு அமையாது, கைதட்டலுக்கு மட்டுமே உதவும், அதனால் தங்களுக்கு நானும் கைதட்டுகிறேன்.

    அனைத்திலும் முறைதவறாமல் சிந்தித்து பாருங்கள், கீதையில் கூறியிருப்பது புரியும். தாங்கள் முறையில்லாமல் சிந்திப்பதினால்தான் இப்படி தோன்றுகிறது.
    சீதை திருமணம் வரை அவர் தாய் தந்தைக்கு மகள் பிறகு இராமனின் மனைவி, இது முறையானது. இராவனன் சீதையை கவர்ந்தது தாறானது.
    தங்களின் பணம் உங்களின் அனுமதியுடன் செலவழிந்தால் முறையானது, வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டால் தவறானது, வித்தியாசத்தை உணருங்கள். முறையான செயலுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடிவாலம் இட்ட குதிரை போன்று இருக்க கூடாது.

    நன்றி

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா!

    நான், கடமைகளைச் செய்வது பற்றி, ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!

    நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுதுபோக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!

    www.lusappani.blogspot.in

    ReplyDelete