Tuesday, May 18, 2010
அனைவரும் படியுங்கள்-கண்டிப்பாக
நட்சத்திர ஜன்னலில் விமலா எட்டிப் பார்க்கிறார்
'சூரியவம்சம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. கணவர் படிக்காதவர். பட்டப்படிப்பு முடித்த மனைவி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புவார். ஒரு குழந்தைக்கு தாயான மனைவியைப் பாசத்தோடு படிக்க அனுப்பிவைப்பார் கணவர். "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' என்று கவிஞர் மு.மேத்தாவின் பாட்டு வரும். பாடல் முடிந்தவுடன் கணவரின் சொந்த ஊருக்கே மாவட்ட ஆட்சியராகப் பணி புரிய ரயிலில் வந்து இறங்குவார் மனைவி.
15 நிமிஷங்கள் மட்டுமே வரும் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியோடு அந்தக் காட்சியை மறந்து விடுவோம். ஆனால், காட்சி அதே.. ஆண்டுகள் மட்டும் ஐந்து... கணவர் மற்றும் குடும்பத்தார் உதவியோடு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் (அகில இந்திய அளவில் 162-வது இடம்) திருச்சியைச் சேர்ந்த விமலா (32). திருச்சி திரு.வி.க. நகரில் கணவர் குமார், மகன்கள் ஆகாஷ் (11), பிரகாஷ் (11) (இரட்டைக் குழந்தைகள்), மாமியார் உள்ளிட்டவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் விமலா தனது வெற்றிப் பயணம் குறித்து தொடர்கிறார்...
""கரூர் பசுபதிபாளையம்தான் எனது சொந்த ஊர். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 1998-ல் இளநிலை வேதியியல் பட்டப்படிப்பை முடித்தேன். கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. அப்போது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய உயர் அதிகாரிகளைக் கண்டதும் நாமும் இதுபோல வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால், இறுதியாண்டு படிப்பை முடித்ததும் திருச்சியில் அச்சகம் நடத்தி வரும் குமாருடன் (தனது கணவரைக் கைகாட்டுகிறார்) திருமணம் நடந்துவிட்டது. மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அத்தோடு முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்.
இதற்கிடையே, 2000-ம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இரட்டைக் குழந்தைகளாக ஆகாஷ், பிரகாஷ் பிறந்ததால் நான் முழுநேரமும் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கினேன்.
2004-ல் ஒரு நாள் கணவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஐ.ஏ.எஸ். படித்திருக்கலாம் என்று ஏக்கத்தோடு கூறினேன். நான் சற்றும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து வந்தது. உனக்கு விருப்பம் இருந்தால் இந்த நொடியிலேயே படிப்பை தொடரலாம் என்றார் எந்தவித கோபமும் இல்லாமல்.
இதுதொடர்பாக குடும்பத்தாரிடம் அன்றே விவாதித்தேன். எனது ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறுவதற்கான அறிகுறி கண் முன்னால் வந்து போனது. அதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.
2005-ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வில் முதன்முதலாக பங்கேற்றேன். தோல்வியே வந்து சேர்ந்தது. இந்திய வரலாற்றை முதல் நிலைப் பாடமாகவும், தமிழ் இலக்கணத்தை முதன்மைப் பாடமாகவும் தேர்வு செய்தேன்.
திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் போட்டித் தேர்வு மையங்களிலேயே எனது நேரங்கள் கழிந்தன. 2-வது முறையும் (2006) தோல்வியே. 3-வது முறை (2007) முதல் நிலைத் தேர்விலும், 4-வது முறை (2008) முதன்மைத் தேர்விலும் வெற்றி கிடைத்தது. இருப்பினும், முழுமையாக என்னால் வெற்றி பெற முடியவில்லை.
தோல்வி ஏற்பட்டபோது எதனால் தோல்வி என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தொடர் தோல்வி என்னைப் பாதித்தாலும் கணவர் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருந்தனர்.
எனது தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, ஓரளவு திருப்தியோடு 5-வது முறையாக கடந்தாண்டு (2009) தேர்வு எழுதினேன். அனைத்திலும் வெற்றி பெற்று, இப்போது குடும்பத்தார் மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் வயதும், திருமணமும் ஒரு தடையே இல்லை. ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் புத்தகத்தை தொட்டேன். அதுதான் கஷ்டமாக இருந்தது.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற இழந்தவை சொந்த பந்தங்களின் நட்பையும். குழந்தைகளின் பாசத்தையும்தான். சொந்தக்காரர்களின் எந்த நிகழ்ச்சிகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், பல கஷ்டங்களுக்கு இடையே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
கூட்டுக் குடும்பம், கணவரின் ஒத்துழைப்பு இவை இரண்டுமே திருமணத்துக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற எனக்கு துணையாக அமைந்தவை. இவை மற்ற பெண்களுக்கும் அமைந்தால், அவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம்'' என்றார் விமலா.
விமலாவின் கணவர் குமார் தொடர்கிறார்...
""ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற விமலாவைவிட எனக்குத்தான் பாராட்டுகள் அதிகம் வருகின்றன. யார் வாழ்த்து கூறினாலும், உன் உதவி இல்லாமல் விமலா எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்கின்றனர்.
கணவன்- மனைவிக்குள் உள்ள புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் தன்மை, பணியைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவையே விமலாவுக்கு நான் செய்தவை. மேலும், எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதாலேயே, இந்த வெற்றி சாத்தியமானது'' என்றார் குமார்.
பிளஸ் 2 மட்டுமே முடித்துள்ளார் குமார். அவரது மனைவி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் போகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திரையில் பார்த்த சில நிமிஷ காட்சிகள் குமார்- விமலா தம்பதியின் வாழ்க்கையில் அப்படியே நடந்திருப்பது ஆச்சரியத்துக்குரியதுதானே!
நன்றி -- தினமணி செய்தி தாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment